விதை தேர்வு

“இயற்கையில் விளைந்த எந்த விதைக்கும் உழுத நிலம் தேவையில்லை” – மசானபு ஃபுகோகா

மனிதர்கள் காட்டிலே வாழ்ந்த காலம் தொட்டு “விதை”களைத் தேர்வு செய்யவும் அவைகளை சேமிக்கவும் மீண்டும் விதைக்கவும் தேர்ச்சி பெற்றார்கள். இன்று உலகில் உள்ள அத்தனை பயிர்களுக்கும் உலகம் நாகரீகத்தின் தொட்டிலில் இருந்த போதே தேர்ந்தெடுக்கப்பட்ட “விதை”கள் தான் ஆதாரம். இடத்துக்கு இடமும் பருவத்திற்கு பருவமும் பயிர்களும் மாறுபடுகின்றன. தமிழ்ர்களின் உணவில் முக்கிய மான பயிராக விளங்குவது “நெல்”. இந்த நெல்லில் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை முப்பதாயிரம் வகைகள் இருந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இன்று தமிழ்நாட்டில் அவற்றில் 40 அல்லது 50 வகைகள் இருந்தாலே வியப்புக்கு உரியதாக இருக்கும்.

பண்டைய காலம் தொட்டு பெண்கள் விதை பாதுகப்பளரகவும், நேர்த்தியான விதைகளை தேர்வு செய்து விதை பரிமாற்றத்தை செய்து வந்துள்ளனர். கால்நடைகளை கொண்டு, கடினமாக உழைத்து வேளாண்மை செய்வது ஆண்களின் வேலையாகவும், விளைந்த பொருட்களை பாதுகாத்து, பாக்குவப்படுத்துவது பெண்களின் வேலையாகவும் இருந்தது. எனவே விதைகள் என்பது எப்போதும் பெண்களின் வசமே இருந்தது. பாதுகாத்த விதைகளை மறுபருவ விவசாயத்துக்கு பயன்படுத்தும் முன் சில பரிசோதனைகளை செய்தனர். அது வேறும் பரிசோதனை மட்டும் அல்ல நமது வழிபாடு, நம்பிக்கை, கலாசாரம் அனைத்தும் அடங்கி இருந்தது. அந்தவகையிலே முளைப்பாரி திருவிழா போன்றவை கொண்டாடப்பட்டது. நமது நிலங்களில் கிடக்கும் சாணம் மற்றும் மண்ணை சிறிய மண்பாண்டத்தில் போட்டு அதன் மேல் நமது வீட்டில் உள்ள தானியங்களை விதைத்து அதை வீட்டின் ஒரு பகுதியில் வைத்து தினமும் சொந்த கிணற்று நீரை ஊற்றுவார்கள். அதனுடைய வளர்ச்சியை கவனத்தில் கொள்வார்கள். அவ்வாறு வளர்ந்த பயிரை கோவிலுக்கு எடுத்து சென்று அனைவரும் வருசையாக வைத்து வழிப்பட்டு நீர்நிலையில் இடுவார்கள். இது இறைவழிபாடு என்றாலும் இதில் மிகபெரிய விஞ்ஞானம் உள்ளது. அது நமது வயலின் மண் வளமாக இருந்தால் பயிர் நன்றாக வளரும், நமது விதை நன்றாக இருந்தால் அனைத்து விதைகளும் நன்றாக முளைக்கும் ,நமது தண்ணீர் நன்றாக இருந்தால் பயிர் நீண்டு வளரும். நமது விதை பாதுகாப்பாக இருந்தால் பூச்சி, பூஞ்சான் தாக்காது. அவ்வாறு இல்லாது முளைப்பாரி நன்றாக வளரவில்லை என்றால் நாம் நமது விதைகள் நன்றாக இல்லை என்பதை உணர்ந்து, நாம் யாரிடம் விதை வாங்கலாம் என்பதை, கோவிலில் நன்றாக வளர்ந்த முளைபாரியை வைத்து முடிவுசெய்யலாம். ஆக மண் பரிசோதனை,தண்ணீர் பரிசோதனை, விதை பரிசோதனை , விதையின் முளைப்பு தன்மை, விதை தேர்வு ஆகிய அனைத்து பரிசோதனையும் நடக்கும் கூடம் நமது இல்லம்.

சில விதை தேர்வு உத்திகள்:

ஒரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின்போது உழவர் அதைப் பார்த்து விதை” எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கிறார்கள். முந்தைய விளைச்சலின் போதே அடுத்த பட்டத்திற்கான விதைகளை பாதுகாப்பாக கோட்டம், குதிர், பரண் மற்றும் பல விதை பாதுகாக்கும் களஞ்சியம் கொண்டு சேமித்து வைப்பதுண்டு.

விதைக்கும் நேரத்தில் நேர்த்தியான விதைகளை தேர்வு செய்வது அவசியம். விதை தேர்வில் நமது விதைகள் சிறிய விதைகளா ? பெரிய விதைகளா? என்பதை பொருத்து, விதைக்கும் இடத்தின் அளவை பொருத்தும் நாம் விதையின் அளவினை கொண்டு நமக்கு எளிமையான விதை தேர்வு முறைகளை கையாளலாம்.

பெரிய விதைகளா இருப்பின் , விதைகளை முறத்தில் அல்லது தரையில் பரப்பி பதரான, பூச்சி தாகிய விதைகளை நீக்கிவிட்டு, திடமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.

நெல் விதை தேர்வு:

15 லிட்டர் பிளாஸ்டிக் வாளியில் ,1௦ லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு கோழிமுட்டையை அதில் போட்டு விடவும். முட்டை அடியில் சென்றுவிடும், அதில் கல் உப்பை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கரைத்துவிடவும். பத்து லிட்டர் தண்ணீர்க்கு 2கி உப்பு போதுமானதாக இருக்கும்.

உப்பு காரணமாக தண்ணியோட அடர்த்தி அதிகமாகும். அதனால் முட்டையின் மேல் பக்கம் மேல்வந்து தெரிந்தால் தண்ணீர் தரம் பிரிக்க தயாராக உள்ளது. இந்த கரைசலில் 1௦ கிலோ விகிதம் நெல் விதைகளை மெதுவாக போடவும். பதரான நெல் விதைகள்,எடை குறைந்த நெல் விதைகளும் மேலே மிதக்கும். அவைகளை எடுத்துவிட்டு நல்ல நெல் மணிகளை எடுத்து 3 முறை நீரில் கழுவி. விதைகளை உலர்த்தி காய வைத்து, விதைப்புக்கு பயன்படுத்துங்கள்.

பிற பயிர் வகைகளையும் இதே முறையில் தேர்வு செயலாம்.